அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கிறோம். உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவது தவறான செயல். அதனால்தான் உலக நாடுகளால் ரஷ்ய அதிபர் புடின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேநேரம் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க படைகள் மோதாது.
ரஷ்ய படை தொடர்ந்து முன்னேறிச் சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புடினின் போர் திட்டமிடப்பட்ட ஒன்று. அதனால்தான் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை அவர் நிராகரித்துவிட்டார். உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புடின் தவறாக கணித்துவிட்டார். நாங்கள் அவற்றுக்கு தயாராகவே இருந்தோம். அதுமட்டுமல்ல, மேற்குலக நாடுகள் நேட்டோ நாடுகளை புடின் தவறாக கணித்துவிட்டார்” என்று உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கண்டனத்தை தெரிவித்தார் பைடன்.
ஏற்கெனவே பிரிட்டன் அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்த நிலையில், தற்போது அமெரிக்காவும் இதை தெரிவித்துள்ளது.