நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நியூ யார்க்கின் GRAND CENTRAL STATIONல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நியூ யார்க்கின் போக்குவரத்தில் பெரும் பங்காற்றும் இந்த இடத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு நடக்கும் போராட்டத்தின் நோக்கம் ஒன்றுதான். அது, ‘இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்குமான போர் முடிவுக்கு வர வேண்டும்’ என்பது.
ஒரு பக்கம் ஐநாவில் அமெரிக்கா காஸாவுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்காவிலேயே மக்கள் காஸாவிற்கு ஆதரவாக போராடுகிறார்கள்.
இதற்கும் அசுரனுக்கு என்ன சம்பந்தம் என்கிறீர்களா..? இருக்கிறது. அசுரன் பட இறுதியில் தனுஷ் தன் மகனிடம், "நமக்கு ஒருத்தன் செஞ்சத, நாம இன்னொருத்தனுக்கு செய்யக்கூடாது" என அறிவுரை கூறுவார். ஆம், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் யூதர்கள்.
கறுப்பு நிற டீ சர்ட்களை அணிந்து கொண்டு, பாலஸ்தீன இன விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த யூதர்கள். 'NOT IN OUR NAME' என அவர்களின் டீ ஷர்ட்களில் எழுதப்பட்டிருந்தது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான போர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமான போர் என இப்போது நடந்துகொண்டிருக்கும் அரச வன்முறையை நாம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
தங்களுக்கென தனி நாடு வேண்டும் என யூதர்கள் முடிவெடுத்ததுதான் இந்த யுத்தத்தின் ஆரம்பப் புள்ளி. இந்தப் போரில் அரபு தேசத்தவர்கள் ஒரு பக்கமும், மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கமும் பிரிந்து இருப்பதற்குக் காரணமும் இதுதான்.
ஆம், இந்தப் போர் தற்போது யூதர்கள் வெர்சஸ் இஸ்லாமியர்கள் என மாறியிருக்கிறது.
உலகப் போர் சமயத்தில் யூதர்கள் சொல்லில் அடங்கா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். எண்ணற்ற திரைப்படங்களும், புத்தகங்களும் யூதர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு சாட்சியாக இன்றுவரை வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவுஷ்விட்ஸ் வதை முகாமில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட 11 லட்ச யூதர்களின் ஆன்மாக்கள் அந்த துன்பவியல் சம்பவத்தின் நேரடி சாட்சியங்கள். அதற்குப் பிறகு சிதறிக்கிடந்த யூதர்கள் ஒரே தேசமாக இஸ்ரேலை உருவாக்கியது பழைய கதை.
ஆனால், தற்போது அதே யூதர்கள்தான் , மீதமிருக்கும் பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் அப்பாவி மக்களை கொல்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய நகைமுரண். இதற்கு எதிராகத்தான் நியூ யார்க்கில் Jewish Voice for Peace என்னும் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது. கடந்த இரு தசாப்தங்களில் வன்முறையின்றி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இதைப் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு அரிசியிலும் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்பது போல், காஸாவில் கொல்லப்படும் ஒவ்வொரு உயிரிலும் யூதர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என நம்புகிறது இந்த அமைதிக்கான யூதர்களின் குரல் அமைப்பு. இது காலம் கடந்து நிற்கப்போகும் வரலாற்றுப் பிழை என தீர்க்கமாக நம்புகிறது.
காஸாவில் விரைவில் அமைதி திரும்பட்டும்.