சிங்கப்பூர் உணவகம்: தான் சாப்பிட்ட நண்டு விலையைக் கேட்டு ‘ஷாக்’ ஆன ஜப்பான் பெண்மணி!
ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான ஷின்பா என்பவர், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தன் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் சாப்பிட அமர்ந்தபோது ஹோட்டல் பணியாளர் உணவு வகைகளைத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் நண்டு டிஷ் ஆர்டர் செய்து ஷின்பா சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டு முடித்ததும் பில் கொடுக்கச் சென்றபோது அதிர்ந்துபோயிருக்கிறார் ஷின்பா. காரணம், அவர் சாப்பிட்ட நண்டு டிஷ்-க்கு $680 (ரூ.56,503) தரவேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
அப்போது ஷின்பா, ‘பணியாளர் $20 மதிப்புள்ள நண்டு டிஷ்ஷைத்தான் எம்மிடம் காட்டினார். ஆனால், நீங்களோ $680 வசூலிக்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம், ’$20 என்பது 100 கிராம் நண்டு டிஷ்-க்குரிய தொகை’ என விளக்கியுள்ளது. அத்துடன், ‘நீங்கள் உள்பட 4 பேர் சாப்பிட்ட நண்டு கிராமின் மொத்த எடை 3,500. நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு பார்த்தது, 100 கிராம் நண்டுக்கான விலை. நீங்கள் அனைவரும் சாப்பிட்ட நண்டுவின் மொத்த எடைக்குரிய தொகைதான் இப்போது வசூல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
இதைக் கேட்டு அதிர்ந்து போனவர், ’அதுகுறித்து ஏன் எம்மிடம் முன்பே தெரிவிக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்பியதுடன், போலீஸுக்கும் போன் செய்துள்ளார். அதன்பேரில் அங்குவந்த போலீஸார், ஷின்பாவிடமும் ஹோட்டல் நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தியுள்ளனர். ஊழியர்களும் தாங்கள் நண்டின் விலை குறித்து ஷின்பாவிடம் தெரிவித்தோம் எனக் கூறியுள்ளனர். மேலும் விசாரணையின்போது ஹோட்டல் நிர்வாகத்தினர், தாங்கள் அதிகமாக வசூல் செய்யவில்லை என்றும், இதேபோன்று மற்றொரு குழுவினருக்கு வசூலித்த பில் தொகையையும் காட்டியுள்ளனர்.
எனினும் இருதரப்புக்கும் விவாதம் நீண்டுகொண்டே சென்றவேளையில், ஹோட்டல் நிர்வாகம், ஷின்பாவின் பில் தொகையில் $78 (ரூ. 6,479) தொகையைக் குறைக்க ஒப்புக்கொண்டது. இருப்பினும், ஷின்பா இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தையும் தொடர்பு கொண்டார். மேலும் அவரது வழக்கு சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.