ரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கால் உடைந்தாலும் தவழ்ந்து சென்ற வீராங்கனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஜப்பான் நாட்டின் ஃபுகோகா நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டி நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீராங்கனையும் 2.2 மைல்கள் ஓடி, தன்னுடைய அணியின் மற்றொரு வீராங்கனைக்கு தங்கள் கையில் இருக்கும் வளையத்தை மாற்ற வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்ற ரெய் லிடா என்ற 19 வயது மாணவிக்கு, ஓடும் போது வலது காலில் முறிவு ஏற்பட்டது. முறிவினால் ஓட முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், நம்பிக்கையை இழக்காத அப்பெண் தவழ்ந்து கொண்டே சென்றார்.
தவழ்ந்து கொண்டே அவர் சுமார் 700 அடிகளை கடந்தார். இதனால் அவரது இரண்டு மூட்டுக்களிலும் ரத்தம் வழிந்தது. ரத்தம் வழிய வழிய அவர் தன் கையில் இருந்த வளையத்தை தனது சக ஓட்டக்காரரிடம் எடுத்துச் சென்று கொடுத்தார். இதைக்கண்ட அவரது சக ஓட்டக்கார வீராங்கனை கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.