’மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது’ என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதை ஜப்பானில் நடந்துள்ளது.
ஜப்பானில் உள்ள குமாமோட்டோ என்ற நகரில் உள்ள சுவோ வார்டில் 54 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன்னுடைய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இரவு, தன்னுடைய வீட்டில் கரப்பான் பூச்சி ஒன்று செல்வதைப் பார்த்துள்ளார்.
இதனால் கடும் கோபமுற்ற அதைக் கொல்லும் நோக்கில் முடிவெடுத்து பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வீடு முழுதும் தெளித்துள்ளார். இதில், துரதிர்ஷ்டவசமாக மின் இணைப்பின் அருகில் அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் தெளித்ததால், தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அவர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ’கரப்பான் பூச்சி இறந்துவிட்டதா’ என ஒருவர், நகைச்சுவையாய்க் கேட்க, இன்னொருவரோ, ‘அவருடைய இந்த முயற்சியைப் பார்த்து கரப்பான் பூச்சி சிரித்தது’ எனப் பதிவிட்டுள்ளார். இப்படி, பலரும் அந்தச் செய்தி குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவம், கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது. அப்போது மது போதையில் இருந்தபடியே கரப்பான் பூச்சியைக் கொல்ல நினைத்துள்ளார். அதில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது வீடே எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்ததுடன் 10 பேரின் வீடுகள் தீய்க்கு இரையாயின என தகவல்கள் வெளியாகி இருந்தன.