உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தெலங்கானா மற்றும் டெல்லியில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரேத்யக சிகிச்சை முறை இல்லை என்றாலும் தனிப்பட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பதன் வழியாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் ஜாக்கிசான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக செய்திகள் பரவின. இணையத்தில் பரவிய செய்தியைக் கண்ட பலரும் ஜாக்கிசான் விரைவில் குணமடைய வேண்டுமென்றும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தனக்கு கொரோனா இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எல்லோருடைய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி! நான் பாதுகாப்பாகவும், மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவுசெய்து யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லோரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.