நியூசிலாந்து பொதுத் தேர்தலில் மிகப்பெரிய மைல்கல் வெற்றியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் சமூக சமத்துவமின்மையை சமாளிக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தலில் எண்ணப்பட்ட 87 சதவீத வாக்குகளில், 49 சதவீதம் வாக்குகளை ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது. 1930 ஆம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வாக்குகளில் இதுவே அதிகம் எனக் கூறப்படுகிறது. ஜெசிந்தாவை எதிர்த்து நின்ற தேசிய கட்சி 27 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்ததில் ஜெசிந்தா ஆர்டனுக்கு நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ஆக்லாந்தில் தொண்டர்களைச் சந்தித்த ஜெசிந்தா, "அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்று உற்சாகமாகக் குறிப்பிட்டார்.