நியூசிலாந்து பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
நியூசிலாந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி 27 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில், 64 இடங்கள் தொழிலாளர் கட்சியின் வசம் வந்துள்ளது. எனவே ஜெசிந்தா ஆர்டெர்னே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
நியூசிலாந்தின் ஹாமில்டனில் 1980ஆம் ஆண்டு பிறந்தார் ஜெசிந்தா ஆர்டெர்ன். தந்தை காவல்துறை அதிகாரி, தாய் பள்ளியில் சமையல் கலைஞர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெசிந்தா ஒரு கட்டத்தில் மீன் விற்கும் அங்காடியில் பணி செய்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்போதைய நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க்கின் அலுவலகத்தில் ஆய்வாளராக பணியை தொடங்கினார். பின்னர் லண்டன் சென்ற அவர் தாயகம் திரும்பி தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
2008ஆம் ஆண்டு பொதுதேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு எம்பி-ஆக தேர்வானார். 2017ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் துணை தலைவராக உயர்ந்தார். அதே ஆண்டு நாட்டின் பிரதமராகும் வாய்ப்பும் ஜெசிந்தாவுக்கு கிடைத்தது.
தன்னுடைய 37ஆவது வயதில் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. குறிப்பாக கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல். இந்த விவகாரத்தில் நாடே கொந்தளித்த நிலையில் சூழலை சாதுர்யமாக கையாண்டு அமைதியை நிலைநாட்டினார் ஜெசிந்தா. அது முடிந்த உடன் எரிமலை வெடிப்பு என்ற பேரிடர். அதனையும் திறமையாக கையாண்ட ஜெசிந்தா கனிவான பிரதமர் என்ற பெயரை பெற்றார். பதவியில் இருக்கும் போதே குழந்தை பெற்றெடுத்து ஆறு வாரங்களில் பணிக்கு திரும்பினார்.
உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. அதற்கு ஜெசிந்தா எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகளே காரணம். இது சர்வதேச அளவில் ஜெசிந்தாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது, உலகின் ஆளுமை மிக்க தலைவராகவும் உயர்த்தியது.
இந்த பெருந்தொற்று கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சேவைகளுக்காக நியூசிலாந்து மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜெசிந்தாவுக்கு வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்