இந்திய மக்களின் அரவணைப்பை பாராட்டுவதாக இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த பிப்ரவரி 24 காலை, குஜராத் மாநிலம், அகமதாபாத் வந்தார். முதல்முறையாக இந்தியா வந்த அவருக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையில் அவருடைய மகள் இவான்கா ட்ரம்பும் கலந்துகொண்டார். முக்கிய தொழிலதிபராக வலம் வரும் இவான்கா இந்தியாவின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இத்தகைய புகைப்படங்கள் இந்தியாவில் பலரின் பார்வைகளையும் திரும்பி பார்க்க வைத்தது. நெட்டிசன்ஸ் ஒருபடி மேலே சென்று அவரது புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.
இதைப்பார்த்த இவான்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இந்திய மக்களின் அரவணைப்பை தான் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். கண்கவர் தாஜ்மஹாலுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி எனவும் இதை என்னால் மறக்கமுடியாத அனுபவம் என்றும் வலைதளவாசி ஒருவருக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் இவான்கா.