நவீன அறிவியல் உலகில் டீப்பேக் என்ற ஏஐ தொழில்நுட்பத்தால் சித்தரிக்கப்படும் வீடியோக்களால் பெரும் ஆபத்து பெருகிவருகிறது. சமீபத்தில்கூட, நடிகை ராஷ்மிகா மந்தனாகூட, இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவுக்கு ஆளாகியிருந்தார். அதேபோல், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இத்தாலியின் பெண் பிரதமரான ஜார்ஜியா மெலோனியின் ஆபாச ஏஐ வீடியோ ஒன்றும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், கடந்த 2022ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதுகுறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்யத் தொடங்கியதில், அமெரிக்காவில் வாழும் 40 வயது நபரும், அவருடைய 73 வயது தந்தையும் சேர்ந்து அந்த வீடியோவை குறிப்பிட்ட ஆபாச வலைபக்கத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அந்த வீடியோவைப் பதிவேற்ற பயன்படுத்தப்பட்ட செல்போனைக் கண்காணித்ததன் மூலம், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு இத்தாலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் ஜார்ஜியா மெலோனி தரப்பு, ”பிரதமர் முகத்தை Deepfake AI மூலம் ஆபாசமாகச் சித்தரித்ததற்கு நஷ்டஈடாக 1,00,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,016,521) வழங்க வேண்டும். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார். இதுபோன்ற பிரச்னையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.