சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிறையின் கதவுகள், சுவர்கள் சேதமான நிலையில், அதனை பயன்படுத்தி சிறையில் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு 20 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி, சிரியாவை நிலைகுலையச் செய்த நிலநடுக்கம்!
துருக்கி மற்றும் சிரியா எல்லைப்பகுதியில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. அதைத்தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவுகளில் மேலும் 2 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து பதிவானதால் துருக்கி மற்றும் சிரியா நாடுகள் மொத்தமாய் நிலை குலைந்துள்ளன. சீட்டு கட்டுகள் போல் இடிந்து விழுந்த கட்டிடங்களில் பெரும்பாலும் குடியிருப்பு கட்டிடங்கள் என்பதால், உயிர் பலி எண்ணிக்கை 5000த்தை நெருங்கியுள்ளது. மேலும் பலபேர் இடுபாடுகளில் சிக்கி தவித்து வரும் நிலையில், மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உயிரிழப்பு எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கும் - WHO
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பான WHO, இறப்பு எண்ணிக்கை மேலும் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “ நிலநடுக்கத்தில் துரதிஷ்டவசமாக ஒரு விசயத்தை நாங்கள் பார்த்து வருகிறோம். வரும் வாரத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் இடுபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக” தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து தப்பித்த பயங்கரவாதிகள்!
இந்நிலையில் தான் சிரியா சிறையில் இருந்து பயங்கரவாதிகள் 20 பேர் தப்பித்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லைக்கு அருகில் ரஜோ நகரில் இராணுவத்தின் காவல் சிறை உள்ளது. அந்த சிறையில் சுமார் 2,000 பேர் சிறைக்கைதிகளாக உள்ளனர். அவர்களில் சுமார் 1,300 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் சிறையின் கதவுகள் மற்றும் சுவர்கள் சேதமான நிலையில், சிறைக்குள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பித்து வெளியேறிவிட்டதாக தெரியவந்துள்ளது.
எத்தனை பேர் தப்பித்தார்கள்?
இதுகுறித்து பிரிட்டிஸ்ஸை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சிரியா மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு அமைப்பானது, “ நிலநடுக்கத்தை பயன்படுத்தி சிறைச்சாலையில் கலகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் இதுவரை எத்தனை தீவிரவாதிகள் தப்பித்து சென்றுள்ளனர் என்ற தகவலை உறுதிசெய்யமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
சிறையில் காவல் அதிகாரியாக இருந்த ஒருவர் பேசுகையில், “நிலநடுக்கத்திற்குப் பிறகு ரஜோ பகுதி பாதிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட சேதத்தை பயன்படுத்தி சிறையில் கைதிகள் கலவரம் செய்யத் தொடங்கினர். மேலும் சிறைச்சாலையின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துருக்கியில் தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களாக 4ஆவது 5.4 ரிக்டர், 5ஆவது 5.9 ரிக்டர் அளவுகோல்களில் இன்று புதிதாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.