உரங்களை நிராகரித்த விவகாரத்தில் இலங்கை மீது பொருளாதார தடைகள் விதிக்க சீன நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த கிங்டாவ் சிவீன் பயோடெக் என்ற நிறுவனம் இலங்கைக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20,000 டன் இயற்கை உரத்தை அனுப்பியது. இந்த உரம் பயிர்களுக்கு பலன் தருவதற்கு பதில் பாதிப்பையே தரும் என இலங்கை வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்ததால் அந்த உரம் நிராகரிக்கப்பட்டது. இதனால் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கருதும் சீன நிறுவனம், இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு தங்கள் நாட்டு ஷாங்டாங் மாகாண அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.
மேலும் சர்வதேச வர்த்தக மத்தியஸ்த அமைப்புகளிடமும் இவ்விவகாரத்தை கொண்டு சென்று இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி தர சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கைக்கு இது மேலும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் தகுதியை அடிமட்ட அளவுக்கு குறைத்த ஃபிட்ச் நிறுவனம் அந்நாடு கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது.
இதையும் படிக்க: உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம்