பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபரின் செல்போன் ஒட்டுக்கேட்பு? விசாரணைக்கு உத்தரவு
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் தினம்தோறும் அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானின் தொலைபேசி எண்ணும் உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு முதல் அவர் வழக்கமாக பயன்படுத்திய தொலைபேசி எண்களில் ஒன்றை, மொராக்கோ நாட்டு உளவுத்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாக, பிரான்ஸின் LE MONDE நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபரின் செல்போனை உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் என்று மொராக்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிக், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தஃபா மேட்பவுலி மொராக்கோ பிரதமர் சாத் எடின் எல் ஆத்மானி ஆகியோரின் செல்போன் எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளது.