“போர் நிறுத்தத்திற்கு தற்போது வழியில்லை. ஹமாஸிற்கு எதிரான தாக்குதல் தொடரும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், “போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரண் அடைவதற்கு ஒப்பானது. பயங்கரவாதத்திற்கு அடிபணிவது போலாகும். பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்குப் பின்னும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது.
அதே போல் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் சண்டை நிறுத்தம் என்பதற்கு ஒப்புக்கொள்ள இயலாது” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இதுகுறித்து குறிப்பிடுகையில், “ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்போதுள்ள சண்டை நிறுத்தம் என்பது சரியான தீர்வாக இருக்காது. சண்டை நிறுத்தத்தை தற்போது அமல்படுத்தினால் அதன் மூலம் ஹமாஸ் மட்டுமே பலன் பெறும்.
சண்டை நிறுத்தத்திற்கு பதிலாக தாக்குதல் நடத்தும் இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறவும், மக்களுக்குத் தேவையான உதவிப் பொருள்கள் கிடைக்கவும் வழிவகை செய்ய அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய தாக்குதலில் காஸாவில் மட்டும் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.