கடந்த 7ம் தேதி தொடங்கிய போர், இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், காஸாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால், இந்த உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் சிலர், காஸா மக்களை போலவே வேடமணிந்து வீடியோ எடுத்து அவற்றை டிக் டாக் போன்ற சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக குழந்தைகள், காயமடைந்தவர்கள், தண்ணீர் இன்றி தவிப்பது போன்று வேடமணிந்த இஸ்ரேலியர்கள், இப்போது ஒரு படி மேலே சென்று வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது, இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், குழந்தைகள் பாடும் பாடலை வலுக்கட்டாயமாக கேட்கவைக்கப்பட்டுள்ளனர். அதுவும், இந்த கொடுமை சுமார் 8 மணி நேரத்திற்கு அரங்கேறியுள்ளது.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், இதனை பிடித்துக்கொண்ட இஸ்ரேலியர்கள், இவர்களைப்போலவே வேடமணிந்து தங்களுக்கு பிடித்த பாடல்களைப்போட்டு, பாலஸ்தீனர்களைப்போலவே நடித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் பலர் இதுபோன்று நடித்து வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இது அத்தனையையும் தாண்டி, இஸ்ரேலைச் சேர்ந்த பாடகர் மோசிகோ மோர் என்பவர் காஸா மக்களை அவமதிக்கும் விதமாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். “தண்ணீர், உணவு, மின்சாரம் இன்றி இருப்பவர்கள் யார்? தற்காலிக முகாம்களில் வாழ்வது யார்?” என்று பாடியபடி கேட்க, கூடியிருக்கும் இஸ்ரேலியர்கள் ‘காஸாதான் அது’ என்று உற்சாகத்துடன் பதிலளிக்கின்றனர்.
மேலும், இஸ்ரேல் மட்டுமே உயிரோட இருக்கிறது என்று பாடும் சிலர், பாலஸ்தீன அகதிகள் கைகளில் இஸ்ரேல் கொடியை கொடுத்து அவற்றை கையில் ஏந்தச்சொல்லி நிர்பந்திக்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.