தரைப்படை, வான் படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் (YOAV GALLANT) தெரிவித்துள்ளார். தரைப்படைகள் காஸாவில் இயங்கும் ஹமாஸின் உள் கட்டமைப்பு வசதிகள், பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு அறைகள் போன்றவற்றைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவிற்குள் அக்டோபர் 7ஆம் நாள் முதல் எரிபொருள்கள் அனுமதிக்கப்படாததால் 23 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதனிடையே உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் தாக்குதலில் சேதமுற்றதாக ரெட் கிரசன்ட் அமைப்பு கூறியுள்ளது.
24 மணி நேரத்தில் 93 லாரிகள் உதவிப் பொருள்களுடன் காஸா பகுதிக்குள் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.