இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ’ஹமாஸை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்பது இல்லை’ என சூளுரைத்து காஸா மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன. ஆயினும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், காஸாவின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள நிலையில், கடைசி இலக்காக ரஃபா நகரைக் குறிவைத்துள்ளது.
போர் காரணமாக இடம்பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இந்த ரஃபா நகரில்தான் தஞ்சம் அடைந்துள்ளனர். ‘இங்கு தாக்குதல் நடத்தினால் மிகுந்த மனித பேரிழப்பு உருவாகும்; அதனால் அங்கு தாக்குதல் நடத்த வேண்டாம்’ என ஐநா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் ரஃபா மீது தொடர்ந்து தாக்குதலை அதிகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த மே 28ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலில் ரஃபாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்ததுடன், பலரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதல்களை மையமாகக் கொண்டு 'அனைத்து கண்களும் ரபா மீது' (All Eyes On Rafah) என்ற ஹேஸ்டேக், தஞ்சமடைந்த பாலஸ்தீன மக்களின் கூடார படத்துடன் இணையத்தில் வைரலானது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதி ஒருவர், குழந்தையின் முன் துப்பாக்கியுடன் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள அந்தப் படத்தில், 'அக்டோபர் 7 அன்று உங்கள் கண்கள் எங்கே இருந்தன' என்ற வாசகத்தைப் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ’அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைப் பற்றி ஏன் யாரும் பேசவில்லை’ என்று இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.
இருப்பினும் ‘தற்போது பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலிலும் அப்பாவி மனித உயிர்களே போகின்றன. இன்றும் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அன்று நடந்த சம்பவத்திற்காக, இன்று நடக்கும் கொடூரத்துக்கு உலகம் மௌனம் காக்க வேண்டும் என நினைக்கிறாதா இஸ்ரேல் அரசு?’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.