கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தங்கள் நாட்டின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தொடங்கிய போர் 2 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் காஸாவிலிருந்து தங்கள் நாட்டு எல்லை வரை பூமிக்கடியில் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட சுரங்கப்பாதை இருப்பது தற்போது தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இரும்பு வலைகளை கொண்டு உறுதியான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதைதான் காஸாவின் மிக நீளமான சுரங்கப்பாதை என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நல்ல காற்றோட்ட வசதி, மின் வசதி என பல்வேறு வசதிகளும் இப்பாதையில் இருப்பதாக அவர் கூறினார், இப்பாதையில் ஒரு கார் செல்லும் அளவுக்கு இடம் இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இப்பாதை வழியாகதான் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடந்த போது ஹமாஸ் அமைப்பினரும் ஆயுதங்களும் வந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. பாதுகாப்பு அபாயம் மிகுந்த இப்பாதையை தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.