இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ’ஹமாஸை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்பது இல்லை’ என சூளுரைத்து காஸா மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தி வருவதுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆயினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணயக்கைதிகளை விடுதலை செய்யவும், தேர்தலை விரைவாக நடத்தவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெடித்த வன்முறையில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்த வன்முறையில் 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
”போர் நடந்துகொண்டிருப்பதால் இஸ்ரேலில் தற்போது தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. இதனால் தேர்தலை நடத்தக்கூடாது” என்று நெதன்யாகுவே பலமுறை கூறியுள்ளார். இதையடுத்து, அடுத்த பொதுத் தேர்தல், அக்டோபர் 2026இல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைவைத்துத்தான் அந்நாட்டு அதிபருக்கு எதிராகவே, மக்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.