இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தெற்கு லெபனானில் உள்ள மக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
லெபனான் எல்லைப்பகுதிகளில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தாக்குதலை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள், நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து 50 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறினர். ஐநாவால் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட வடக்குப் பகுதியை நோக்கி மக்கள் சென்றுவருகிறார்கள்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்புல்லாவுக்கும் இடையிலான சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஹெஸ்புல்லாவைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தாக்குதலுக்கு முன்பாக எந்த எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை. இத்தாக்குதலுக்குப் பிறகு சல்பர் போன்ற நாற்றம் அடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இஸ்ரேல், தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இத்தாக்குதலில், லெபனானில் உள்ள 200 ஹெஸ்புல்லா நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், 15 ஹெஸ்புல்லா போராளிகளை கொன்றுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
இதேபோல காசாவிலும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்திவருகிறது. கான் யூனிசில் நடத்திய தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதாகவும், 82 பேர் காயம் அடைந்ததாகவும் காசா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல காசாவின் வெவ்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.