போர் என்றால் எந்த அளவு ஆயுதங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு பணமும் தேவை. ஆயுதங்கள் வாங்க மட்டுமின்றி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும் அடுத்தடுத்த திட்டங்களை நிறைவேற்றவும் பணமே பிராதனம்.
எனவேதான் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக, தங்களுக்கு தேவையான நிதியை கிரிப்டோகரன்சி முறையில் அனுப்புமாறு சமூக வலைதளங்கள் வழியாக ஹமாஸ் குழுவினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அறிந்த இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சைபர் க்ரைம் தடுப்புப் பிரிவினர், ஹமாஸ் குழுவினருக்கு சொந்தமான கிரிப்டோகரன்சி கணக்குகளை முடக்கியுள்ளனர்.
இணையம் மூலம் பணபரிவர்த்தனை நடப்பதையும் தடுத்ததாக கூறும் இஸ்ரேல் அதிகாரிகள், 90 சதவிகித நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக ஹமாஸ் அமைப்பின் பொருளாதார விவகாரங்களை கையாண்ட நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலாவையும் ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக இஸ்ரேல் கூறியிருந்தது. காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினரின் 2021ஆம் ஆண்டு பட்ஜெட் இந்திய மதிப்பில் 582 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
அந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வதில் ஈரான் முதலிடத்தில் இருக்கிறது. எகிப்து, லெபனான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள அமைப்புகள் ஹமாஸ்க்கு நிதி உதவி செய்து வருகின்றன. பல நாடுகளிலுள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸின் கொள்கையை ஆதரிப்பவர்களும் உதவி செய்கின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகளில் நிதி உதவி வேண்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர, காஸா பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி வருவாயும் முக்கிய நிதி ஆதாரம். எனவேதான், ஹமாஸ்க்கு எதிரான போரில் தாக்குதல் ஒருபுறம், அந்த அமைப்பினருக்கு வரும் நிதி ஆதாரங்களை முடக்குவது மறுபுறம் என தீவிரம் காட்டுகிறது இஸ்ரேல்.