சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தாக்குதல் நடத்தியதில் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, வெடிகுண்டுகளைச் சுமந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததுடன், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறியது. ’எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியே இந்த தாக்குதல் ஆகும்’ என ஈரான் தெரிவித்தது.
அதேநேரத்தில், ’ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்’ என்று இஸ்ரேலிய ராணுவத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி (Herzi Halevi) எச்சரித்திருந்தார். ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஆலோசனையிலும் அந்நாடு தீவிரமாய் இறங்கியது.
இதையும் படிக்க: இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ!
இந்த நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையே, ‘இஸ்ரேல் நிலைமையை மோசமாக்காமல் இருக்க வேண்டும்’ என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தின. இதனால், இந்த விஷயத்தில் தற்போது இருநாடுகளும் அமைதி காத்தன. இந்த நிலையில், ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரானின் மேற்குப் பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன. இஸ்ரேல், தனது போரைத் தொடங்கி இருப்பதால், இனி, அந்த இரு நாடுகளுக்கிடையே நேரடிப் போர் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அப்பகுதி போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்குள் போர் தொடர்ந்து நடைபெற்றால், அது மூன்றாம் உலகப்போருக்கும் வழிவகுக்கும் என வல்லுநர்கள் பலர் கணித்துள்ளனர்.