காஸாவின் வடக்கில் உள்ள ஜபாலியாவில் ஏராளமான மக்கள் தஞ்சம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படும் நிலையில், ஜபாலியாவில் உள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் தவிக்கும் நிலைஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருவதாகவும், வடக்கில் இன்னும் 4 லட்சம் மக்கள் உள்ளதாகவும் கூறும் பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் தன்னார்வலர்கள் அமைப்பு, ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. ஜபாலியா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு எகிப்து, ஜோர்டான், சவுதிஅரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது மனிதாபிமானமற்றது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று எகிப்து கூறியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் தலையிடவும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் மூன்று நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஜபாலியா முகாம் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல், ஹமாஸ் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், எனினும் அவர்கள் முகாம்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.