கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி பேசியதாக கூறப்படும் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பேசியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவில் பேசும் ஆண் குரல், மோசூல் நகரில் நடந்த யுத்தம், அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா விடுத்துவரும் மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து கருத்துத் தெரிவிக்கிறது. சுமார் 45 நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பேச்சு இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. ஈராக்கிலும், சிரியாவில் நடந்துவரும் சண்டைகளில் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆயினும் ஐ.எஸ். அமைப்பு இதுவரை அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.