"ஈஸ்டர் தாக்குதல்கள் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்ல..!" - இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

"ஈஸ்டர் தாக்குதல்கள் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்ல..!" - இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்
"ஈஸ்டர் தாக்குதல்கள் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்ல..!" - இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்
Published on

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சிக்கரமான தகவல்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.45 மணியளவில் செயின்ட் ஆன்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலைத் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, சில நிமிடங்களில் ஷாங்கிரி லா ஹோட்டலில் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம், இதனையடுத்து சில மணி நேரங்களில் மூன்று தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன. அங்கும் ஈஸ்டர் தின பிரார்த்தனையில் இருந்த மக்கள் பலர் இறந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இலங்கையிலுள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக இலங்கை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க, அங்கு சோதனையிட சென்றபோது பயங்கரவாதிகள் தங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்தனர். இந்தச் சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் இறந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்கா அருகிலுள்ள விடுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 290 பேர். அத்துடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களும் மிக பெரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில், அதுவும் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். அதேபோல ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கையில் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்ததால் வெளிநாட்டு மக்களும் அதிகளவில் இறந்தனர். பலியானவர்களில் 35-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படும் நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சிகர தகவல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்து வந்த நிலையில், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணை மூலம் இலங்கை அரசு தெரிவித்திருந்தது. மேலும், விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்தான், நாடாளுமன்றத்தில் தற்போது பேசிய தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, "ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன், இலங்கை நபர் ஒருவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பு இருக்கும் தகவல் என்னிடம் உள்ளது. இந்த தொடர்புகள் குறித்து அரசு அறிந்துள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

இவருக்கு பதில் கொடுத்த பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, "அரசுக்கு இந்த விவரங்கள் தெரியும். நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சிலருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முழுமையான விசாரணை முடியும் வர அவர்கள் யார் என்ற ரகசியங்களை கூற முடியாது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 86 பேர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்" எனக் கூறினார்.

இதேபோல், முன்னாள் பாதுகாப்புத் தளபதியும், முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கையில், ``தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களையும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்தனர். ஒரே நேரத்தில் ஆறு குண்டுகள் வெடித்த ஒரே சம்பவம் இதுதான்" என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com