உலக நாடுகளையே கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், துர்க்மேனிஸ்தான் அரசு மட்டும் நாட்டில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என தொடர்ந்து கூறிவருகிறது. அதேசமயம் அது உண்மையா என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத ஒருசில நாடுகளில் துர்க்மேனிஸ்தான் நாடும் ஒன்றாக இருக்கிறது. அருகிலுள்ள மத்திய ஆசிய நாடுகளான ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கடுமையாக போராடிவருகின்றன. ஆனால் துர்க்மேனிஸ்தான் அரசு நிமோனியா காய்ச்சல் மட்டும் இருப்பதாகக் கூறிவருகிறது.
கொரோனா பரவலே இல்லை என அரசு சொல்லிவருவது சந்தேகத்திற்குரியது என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். அப்படி மறுத்து வருவது துர்க்மேனிஸ்தான் மக்களுக்குத்தான் ஆபத்து என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். நோய்த்தொற்று வரும்போது மருத்துவப் பணியாளர்கள் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் குரல்களும் கேட்கின்றன.
கடந்த காலங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் துர்க்மேனிஸ்தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அது எடுத்துவந்தது. தற்காலிகமாக ரயில் சேவைகளை அரசு நிறுத்தியது. மால்கள், உணவகங்கள் மூடப்பட்டன. பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.