பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் பாதுகாப்பு படைகள், இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை கைப்பற்றியதுடன், தாக்குதலும் நடத்தி உள்ளது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் பதற்றம் நிலவும் சூழலில் இந்தச் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அத்துடன் ஈரானுக்கு ஆதரவாக பிற இஸ்லாமிய நாடுகள், ஹவுத்தி தீவிரவாதிகள் களமிறங்கினால் மூன்றாம் போர் மூளும் எனவும் அஞ்சப்படுகிறது.
மற்றொருபுறம், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலரை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலரை தொட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதல் சம்பவத்திற்கு முன்பு பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 85 டாலர் என்ற சராசரி விலையில் இருந்தது.
முன்னதாக கடந்த மாதம் 14ஆம் தேதிதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.
இருப்பினும் மக்களவைத் தேர்தல் தொடங்கவுள்ளதால் தற்போதைக்கு விலை உயர்வு இருக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை உருவாக்கும் என கருதப்படுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படும்.