அமெரிக்காவை தாக்கிய இர்மா புயல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இர்மா புயல் சென்னையை தாக்கும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான இர்மா புயலால் மணிக்கு 220 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயலோடு பெய்த கனமழையால் ஃப்ளோரிடா மாகாணத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற ஒரு புயல் சென்னையை தாக்கும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் வங்காள விரிகுடா கடலில் புயல் உருவாகி வலுப்பெற்றாலும் அது ஆந்திராவையே தாக்கும் என்றும் தமிழகத்தில் இதுபோன்ற வலிமையான சூறாவளிகள் தாக்க வாய்ப்பு குறைவே என்றும் கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
மேலும், தமிழகத்தில் கடந்த 150 ஆண்டுகளில் 1964-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இர்மா போன்ற சூறாவளி ஒருமுறை மட்டுமே கடந்து சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல இர்மா புயலின் போது மணிக்கு 220 கிமீ வேகத்தில் காற்று வீசியது. தமிழகத்தில் புயலின்போது இதுவரை 150 கிமீ வேகத்தை தாண்டியது இல்லை என்றும் வர்தா புயலின் போது மணிக்கு 120 கிமீ வேகத்தில் மட்டுமே காற்று வீசியதாகவும் கூறுகின்றனர்.