அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்தவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). 36 வயதான அவர், ’கடந்த 2017ஆம் ஆண்டு கார் விபத்து காரணமாக, தமக்கு கழுத்து மற்றும் முதுகுத் தண்டிலும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 5 வருடங்கள் செயல்பட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்ததாகவும், தம் குழந்தைகளுடன்கூட விளையாட முடியவில்லை. கார் விபத்தின் காரணமாகத்தான் இந்த செயலற்ற நிலைக்கு தாம் தள்ளப்பட்டோம்’ என தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தில், சுமார் $8,20,000 (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 கோடி) இழப்பீட்டு தொகையை கோரியுள்ளார். அவர்கள் தர மறுத்ததால், கமிலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேற்கு அயர்லாந்தின் லைம்ரிக் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது 2018-ல் நன்கொடை நிகழ்ச்சி ஒன்றில், கமிலா பங்கேற்ற புகைப்படங்கள் அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், தனது நாயுடன் பூங்கா ஒன்றில் அவர் 1 மணி நேரம் பொழுதுபோக்கும் வீடியோ ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டி ஒன்றில், மிக உயரமான எடை நிறைந்த கிறிஸ்துமஸ் மரத்தைத் தூக்கி எறிந்து பரிசு பெற்றுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கிவீசும் காட்சி இடம்பெற்றிருந்தது.
அதாவது, விபத்து பாதிப்பினால் முடங்கியிருப்பதாக கமிலா, திட்டம்போட்டு ஏமாற்றி இருப்பது இதன் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ’பெரிதாக காணப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை எளிதாக கமிலா எறிவது புகைப்படத்தில் தெரிகிறது. தன்னை முடக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டதாக கமிலா கூறி காப்பீட்டை கோருவது மிகைப்படுத்தலாக தெரிகிறது. எனவே, அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டுள்ளார்.