ஈராக்கில் குர்துப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி ஈராக் ராணுவம் முன்னேறி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. எண்ணெய் வயல்கள், விமானப் படைத் தளங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஈராக்கிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்காக குர்திஸ்தானில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட நாள் முதலாக அங்கு ஸ்திரமற்ற நிலை நீடித்து வருகிறது. ஈராக் மட்டுமின்றி அண்டை நாடான துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இந்த பொது வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து ஈராக் அரசுடன் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பொதுவாக்கெடுப்பு முடிவுகளை நிராகரிக்க முடியாது என குர்திஸ்தான் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
மேலும் எண்ணெய் வளம் மிகுந்த கிர்குக் நகரின் பாதுகாப்புக்காக துருக்கியை சேர்ந்த குர்து இன வீரர்களை குர்திஸ்தான் நிர்வாகம் அங்கு குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஈராக் அரசு, கிர்குக் நகரில் உள்ள எண்ணெய் வயல்கள், விமானப் படைத் தளங்களை கைப்பற்றும் நோக்கில் படைகளை அனுப்பி வைத்துள்ளது. அவர்களுக்கும், குர்திஸ்தான் ஆதரவு படைகளுக்கும் இடையே லேசான சண்டை ஏற்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிர்குக் நகருக்குள் சர்வதேச விமானங்கள் தரையிறங்குவதற்கு ஈராக் அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் தங்களது எல்லைகளை மூடும்படி அண்டை நாடான துருக்கி மற்றும் ஈரானையும் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக குர்திஸ்தான் பகுதிக்கு செல்லும் மூன்று எல்லைகளை ஈரான் அடைத்துள்ளது. இதற்கிடையே குர்திஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.