திருமண நிகழ்ச்சியில் பறிபோன 119 உயிர்கள்.. தீவிபத்துக்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்கள்

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 119 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈராக் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
iraq wedding fire
iraq wedding firefile image
Published on

வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம்தான் காராகோஷ். ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நகரமாக காரகோஷ் விளங்குகிறது. மேலும், இந்த நகரத்தில் அல் ஹைதாம் ஹால் எனும் மண்டபம் இருக்கிறது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேர் போன மண்டபமாக விளங்கும் இதில், வழக்கம் போல திருமண நிகழ்ச்சிக்காக நண்பர்கள், உறவினர்கள் என சுமார் ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அனைவரும் அன்பை பரிமாறிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் ஒருபக்கத்தில் பற்றிய தீ, மளமளவென மண்டபம் முழுவதும் சூழ்ந்துள்ளது.

இதில் சிக்கி 119 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 27 குழந்தைகளும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து நடந்து வரும் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 400 பேர் கலந்துகொள்ளும் மண்டபத்தில் 900க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆபத்து காலங்களில், வெளியேறும் வகையில் சரியான அவசர வழிகள் இல்லை, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் கட்டடம் அமைக்கப்பட்டதோடு, அலங்கார பொருட்களும் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக இருந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. மென்மையான பலகைகள் போன்றவை கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், பெரும் அலட்சியத்தால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபகாலமாகவே கூட்டத்தை கையாள்வதில் ஏற்படும் சிக்கல்களால் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com