உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனித தவறின்
காரணமாகவே உக்ரைன் விமானம் சுடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம் நடுவானில்
வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும்
கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விபத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் கருப்புப் பெட்டியை யாரிடமும் வழங்க முடியாது என
ஈரான் அரசு தெரிவித்தது சர்வதேச அரங்கில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது.
இவ்வாறான சூழல்களில் ஈரான் படையினரே தவறுதலாக விமானத்தை தாக்கி தகர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அமெரிக்க தரப்பில்
கூறப்பட்டது. செயற்கைக்கோள்கள், ராடார் உள்ளிட்டவற்றின் சிக்னல் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததில், இரண்டு SA15 ரஷ்ய ரக
ஏவுகணைகள் மூலம் உக்ரைன் விமானம் தாக்கப்பட்டது தெரியவந்ததாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது.
அதிக உயிரிழப்பை கண்ட, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவும் பெரும்பாலான நிபுணர்கள் , விமானத்தை வீழ்த்தியது ஈரான்
ஏவுகணைகளே எனக் கூறுவதாக தெரிவித்தார். எந்த உள்நோக்கத்துடனும் ஈரான் மீது குற்றம்சாட்டவில்லை எனவும் ட்ரூடோ கூறியிருந்தார். விபத்து
நடந்த சூழலும், அதற்கான காரணமும் இதுவரை தெளிவு பெறாமல் இருப்பதால் ஐ.நா தலையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் என உக்ரைனின்
வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்திய கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.