ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை ஏற்க மறுக்கும் பெண்களின் மனநிலையை சரிசெய்ய ‘மனநல சிகிச்சையகம்’ அமைக்க போவதாக ஈரான் அரசு அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில் ஷிரியத் சட்டமானது பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இது மட்டுமல்லாது அண்மை காலமாகவே, ஈரானில் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
சமீபத்தில் கூட, ஈரான் நாட்டில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆடைக்கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாடைகளுடன் வந்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால், இறுதியில் அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்ற முத்திரையை குத்திவிட்டனர்.
இந்நிலையில் பெண்கள் ஹிஜாப் அணிய மறுப்பதை ஈரான் அரசு மனநல பிரச்னையாக சித்தரிப்பதுடன், ‘Clinic for Quitting Hijab Removal' என ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அதற்கான மனநலன் தொடர்பான மருத்துவமனையையும் தொடங்கப்போவதாக தெரிவித்திருப்பதாக தி கார்டியன் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெண்கள் மற்றும் குடும்பத்துறையின் தலைவர் மெஹ்ரி தலேபி தரேஸ்தானி தெரிவிக்கையில், "ஹிஜாப்பைத் துறப்பவர்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை இங்கு வழங்கப்படும். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் மற்றும் இளவயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம் " என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
இது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த ஈரான் பத்திரிகையாளரான சிமா சபேட் தெரிவிக்கையில் “ஹிஜாப் அணிய மறுப்பது நோய் என்று கூறி, அப்பெண்களை ‘குணப்படுத்த’ கிளினிக்குகளை அமைக்கும் யோசனையே ஆபத்தானது. அங்கு ஆளும் நபர்களுக்கு ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அதை ஏற்க மறுப்போரை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவே இதைச் செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அதேப்போல ஈரான் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹொசைன் ரைசி, ’ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைப்பது என்பது ஈரான் சட்டத்திற்கு மட்டுமின்றி இஸ்லாமிய சட்டத்திற்குமே எதிரான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்த ஈரானிய பெண் ஒருவர், “அது கிளிக்கிக்காக இருக்காது. அது ஒரு சிறைச்சாலையாகதான் இருக்கும்” என்றுள்ளார்.
இதுபோன்ற பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடு என்பது ஈரானில் ஏற்படுவது முதன்முறை அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே பூதாகரமாக வெடித்து வரும் ஒன்றுதான்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கூந்தல் முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக் கூறி கைது செய்யப்பட்ட 22 வயது பெண்ணின் மரணம் என்பது அப்போது ஈரானிய பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தவகையில், இந்த புதிய நடைமுறைக்கு சர்வதேச அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன.