ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டது அந்நாட்டு அரசினை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இரவு நேரத்தில் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. 80 அமெரிக்க பயங்கரவாதிகள் உயிரிழந்துவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன. 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.