ஈராக்கில் அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க வீரர்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் விமான நிலைய பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு ஈரான் தரப்பு எந்நேரமும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நேற்றிரவு பாக்தாத்திலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும் ஈராக்கிலுள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், அமெரிக்க வீரர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்றும் அவர்களது படைத்தளத்திலிருந்து சுமார் ஆயிரம் மீட்டர் தொலைவுக்கு அப்பால் விலகிச் செல்லுமாறும் ஈராக் படையினருக்கு ஈரான் ஆதரவு அமைப்பான கதேப் ஹெஸ்புல்லா அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது. இதனிடையே அமெரிக்கர்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் 52 இடங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.