ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி, ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் படைப் பிரிவின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமானி, ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்படுபவர். அரசுக்கு மிக நெருக்கமானவர். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஒரு டஜன் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அயின் அல் அஷாத் தளத்தில் உள்ள விமானப்படை முகாம்களில் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கடந்த வாரம் கொன்ற நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தாக்குதலில் எந்தளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அமைச்சர் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக்கில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி கிரிஷம் தெரிவித்தார். சுலைமானி கொலைக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் படைகள் ஏற்கனவே ஒரு முறை தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.