கொரோனா அச்சுறுத்தலால் ரத்தான வர்த்தக நிகழ்ச்சிகள்.. 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

கொரோனா அச்சுறுத்தலால் ரத்தான வர்த்தக நிகழ்ச்சிகள்.. 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
கொரோனா அச்சுறுத்தலால் ரத்தான வர்த்தக நிகழ்ச்சிகள்.. 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
Published on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக உலகளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு வர்த்தக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற இருந்த மிகப்பெரிய மொபைல் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக ஊழியர்கள் பயணம் செய்வதை பல நிறுவ‌னங்கள் தவிர்த்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஃபேஸ்புக் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தலைமையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற இருந்த F8 டெவ‌லப்பர் மாநாடு கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவன ஊழியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருந்த நிலையில், மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனா, தைவான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகங்‌களை ஊழியர்களின் நலன் கருதி கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல, கலிபோர்னியாவின் மவுண்ட் வியூ பகுதியில் மே மாதம் 1‌ ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற இருந்த‌ டெவலப்பர்களுக்கான ஆண்டு மாநாட்டை கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

அதேபோல, கொரோனா வைரஸ்‌ பரவும் அச்சம் காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற இருந்த வாகன கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களிலிருந்து சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பதாக இருந்தது. கொரோனா வைரஸ் எதிரொலியாக தென் கொரியாவில் உள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தனது உற்பத்தியை ‌தற்காலிகமாக‌ நிறுத்தியுள்ளது.‌ சீனாவில் இருந்து வரும் உதிரிபாகங்களின் வருகை தடைபட்டுள்ளதால்‌ உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு ஊதியங்களும் நிறுத்தி வைக்கப்‌பட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருந்த அடோப் நிறுவனத்தின் உச்சிமாநாடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்திய கடற்படையின் மிலன் பலதரப்பு கடற்பயிற்சி, கொரோனா வைரஸ் பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ‌வர்த்தக நிகழ்ச்சிகளால், சுமார் 3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com