2024ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படத்திற்கான விருதை, ராய்ட்டர்ஸ் (Reuters) பத்திரிகையின் புகைப்படக் கலைஞரான முகமது சலேம் பெற்றுள்ளார். காஸா பகுதியில் பாலஸ்தீனப் பெண் ஒருவர், தனது ஐந்து வயது இறந்துபோன, வெள்ளைத் துணி போற்றிய குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி கொஞ்சுவார். இந்தப் படம், கடந்த ஆண்டு (2023), அக்டோபர் 17ஆம் தேதி, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் பாலஸ்தீனியப் பகுதியில் எடுக்கப்பட்டது. அப்போது இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தவர்களில், இந்தப் பெண்ணும் ஒருவர். அதைத்தான் முகமது சலேம் புகைப்படமாக எடுத்திருந்தார். இந்த படத்திற்குத்தான் தற்போது சர்வதேச விருது கிடைத்துள்ளது.
இந்த விருதைப் பெற்ற முகமது சலேம், “இது கொண்டாடுவதற்கான புகைப்படம் அல்ல. இந்த விருதின்மூலம் உலகப் போரின் மனித தாக்கம், குறிப்பாக குழந்தைகள் மீது இன்னும் விழிப்புணர்வு பெறும்” எனத் தெரிவித்துள்ளார். 39 வயது பாலஸ்தீனியரான முகமது சலேம், 2003 முதல் ராய்ட்டர்ஸில் பணிபுரிகிறார். இவர், கடந்த 2010ஆம் ஆண்டும் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் விருது வென்றுள்ளார்.
ஆம்ஸ்டர்டாமைத் தளமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ ஃபவுண்டேஷன் நடத்தும் இந்தச் சர்வதேச பத்திரிகை புகைப்பட விருது வழங்கும் விழாவில், 130 நாடுகளைச் சேர்ந்த 3,851 புகைப்படக் கலைஞர்களின் 61,062 புகைப்படங்கள் பதிவுசெய்யப்பட்டது. இறுதியில், முகமது சலேமின் புகைப்படத்தை நடுவர் குழு தேர்ந்தெடுத்தது. முகமது சலேமின் புகைப்படம் தேர்வு குறித்து நடுவர் குழு, “கற்பனை செய்ய முடியாத இழப்பின் உருவகத்தைக் கண்முன் நிறுத்தியது" என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இருதரப்பும் போரைக் கைவிட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், போர் தொடர்ந்தபடியே உள்ளது.
இந்த நிலையில்தான் இதுகுறித்து பாதிப்பை ஏற்படுத்திய புகைப்படத்திற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் மட்டும் இதுவரை 99 ஊடகவியலாளர்கள் இறந்திருப்பதாக வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ ஃபவுண்டேஷன் கவலை தெரிவித்துள்ளது. மேலும், ’புகைப்படக் கலைஞர்களின் பணி, பெரும்பாலும் அதிக ஆபத்துடனேயே பயணிக்கிறது. எனினும், மனிதாபிமான தாக்கத்தை உலகுக்குக் காட்ட நினைக்கும் அவர்களின் பணிகளை அங்கீகரிப்பது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளது.