நாளை “இரண்டாம் தாய்” செவிலியர்கள் தினம்

நாளை “இரண்டாம் தாய்” செவிலியர்கள் தினம்
நாளை “இரண்டாம் தாய்” செவிலியர்கள் தினம்
Published on

நவீன தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்து வரும் மருத்துவத்துறையில், செவிலியர்களின் பங்கு இன்றியமையாததாகும். நோயாளிகளுக்கு இரண்டாம் தாயாக உள்ள செவிலியர்களை போற்றி பெருமைப்படுத்த வேண்டிய தினம். 

பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்தத் தினத்தை கடைப்பிடித்து வருகிறது. ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம். வீட்டில் எவ்வளவு பணிகள், பொறுப்பு இருந்தாலும், தன்னை நம்பி வரும் நோயாளிகளின் உயிரைக் கருத்தில் கொண்டு அவற்றை தவிர்ப்பது சிறிது மன வலியை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் உடல் குணமாகி நன்றி என்று சொல்லும் போது, சொந்த காரணங்களால் ஏற்பட்ட அனைத்து வலியும் பஞ்சாகப் பறக்கும் என்கின்றனர் செவிலியர்கள் பெருமிதத்துடன்.

அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு என மருத்துவத்தில் முக்கியமாக கையாள வேண்டிய பிரிவுகளில் கூடுதல் கவனமும், நுட்பமும் மட்டுமின்றி அளவிற்கு அதிகமான பொறுமை தேவைப்படுகிறது. செவிலியர்களான தங்களுக்கு அந்த உணர்வுகள் இயல்பாகவே வந்துவிடும் என்றும், குடும்பங்களின் பங்களிப்பும் அதில் இன்றியமையாதது என்கின்றனர். மேலும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை இத்துறைக்கு ஏற்றார்போல் மெழுகேற்றி கொண்டாலும், சிரித்த முகமும், பரிவான பேச்சு மட்டுமே நோயாளிகளை குணமாக்கும் மருந்து என்பதை ஒவ்வொரு செவிலியர்களும் தானாக படித்து மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்ற மிகப்பெரிய தந்திரத்தை சொல்கின்றனர்.

செவிலியர்கள் என்றாலே பெண்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து வருகின்றனர் ஆண்கள். மருத்துவமனையில் பல பிரிவுகளில் உடல் ரீதியான பணிகளுக்கு ஆண் செவிலியர்களுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், பெண்களை போன்றே பொறுமையும், பரிவும், சேவை செய்யும் மனப்பான்மை ஆண்களிடையே அதிகரித்து வருவதே, தற்போது செவிலியர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்கின்றனர் ஆண் செவிலியர்கள்.

தகவல்கள் : ஐஸ்வர்யா ,கோவை 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com