ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், சில ட்விட்களுக்கு பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா கார் நிறுவனத்தை நடத்தி வரும் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரின் 9 விழுக்காடு பங்குகளை வாங்கியதோடு அந்த நிறுவனத்தையே வாங்கப் போவதாக அறிவித்தார். ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும், தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த பணத்தை அவர் எப்படித் திரட்டப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குறிப்பாக டெல்ஸா நிறுவனத்தின் பங்குகளை சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்து 93 ஆயிரம் கோடி ரூபாயும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக கடனாக 95 ஆயிரம் கோடி ரூபாயும் வாங்கியுள்ளார். கடனை திருப்பிச் செலுத்தக் கோரிய வழிமுறைகளில் ஒன்றாக சில குறிப்பிட்ட ட்விட்களுக்கு பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட பதிவுகளுடன் பிற இணையதளங்களை இணைக்கும் வகையில் பதிவிடப்படும் எம்பெடட் ட்விட்களுக்கு பணம் வசூலிக்கப்படும் என அவர் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ட்விட்டரில் சில பணியாளர்களை நிறுத்தவும், இயக்குநர்களின் ஊதியத்தை குறைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது