இந்தோனேசியா, ஜாவா தீவில் உள்ள நரிங்குல் பகுதியைச் சேர்ந்த 26 வயதானவர் ஏகே (AK). இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிண்டா கன்சா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து காதலித்து வந்துள்ளார். இருவரும் நேரில் சந்தித்த போதெல்லாம் ஆதிண்டா புர்காவை எப்போதும் அணிந்துள்ளார். ஏகே-வும், ‘இஸ்லாம் மதத்தின் மீதுள்ள பற்றின் காரணமாகவே ஆதிண்டா புர்கா அணிந்து வருகிறார்’ என்று கருதியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வருட காதலுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த நிலையில், “திருமணத்தில் கலந்துகொள்ள எனக்கு உறவுகள் இல்லை” என ஆதிண்டா கூறியுள்ளார். இதனால், இருவரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஏ.கேவின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகும், ஆதிண்டா தனது கணவரிடமிருந்து தொடர்ந்து தனது முகத்தை மறைத்தும், ஏ.கே.வின் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் , நண்பர்களுடன் பழக மறுத்தும் வந்துள்ளார். மேலும், மாதவிடாய் சுழற்சியை காரணம் காட்டி அவரிடமிருந்து விலகி இருந்துள்ளார்.
திருமணம் ஆகி 12 நாட்களை கடந்த நிலையிலும், இப்படியே சென்று கொண்டிருந்ததால் ஆதிண்டாவின் நடவடிக்கை மீது ஏகேவிற்கு சந்தேகம் வரத் தொடங்கியுள்ளது. இதனால், ஏகே ஆதிண்டாவைப் பற்றி தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.
இதன் விளைவாக ஆதிண்டாவின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடித்து, அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு ஏகேவுடனான திருமணம் பற்றி எவ்விவரமும் அறியவில்லை என தெரியவந்தது.
மேலும், ஆதிண்டா உண்மையில் ஒரு ஆண் என்றும், அவரின் பெயர் ஈஷ் (ESH) என்பதும் ஏகே-விற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஏகே மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஈஷ் 2020ல் இருந்து கிராஸ் டிரெஸ்ஸிங் செய்து வந்ததால், இவரின் குரல் மென்மையான பெண்ணின் குரல் போல் மாறியுள்ளது. ஆகவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏகே கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஈஷ்-ஐ விசாரித்தபோது அவர் ஏகேவின் சொத்துக்களை திருடுவதற்காக திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஈஷின் மீது மோசடி வழக்கினைப் பதிவு செய்த போலீஸார், அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஜீவ நந்தினி