இந்தோனேஷியாவில் இருந்து பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்ற விமானம் திடீரென்று விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல்பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது 6.33 மணிக்கே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
(ஜகர்தா விமான நிலையம்)
இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதையடுத்து பரபரப்பு நிலவியது. விமானத்தை தேடும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்கிற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த விமானத்தில் 210 பேர் பயணம் செய்யலாம்.
இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதியாகியுள்ளது. உடைந்த விமான பாகங்கள் கடலில் மிதப்பதாகக் கூறப்படு கிறது.