இந்தோனேசியாவின் பாலி நகரை சேர்ந்த பாடி பில்டர் ஜெஸ்டின் விக்கி. 33 வயதான இவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலம் ஜெஸ்டின் விக்கி பிரபலமான பாடி பில்டராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜெஸ்டின் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 210 கிலோ கொண்ட பார்பெலை கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதிகளவு பாரமான எடையை தூக்க முடியாமல் திடீரென அக்கருவி ஜெஸ்டின் கழுத்தில் விழுந்தது. உதவியாளரின் சப்போர்ட் உடன் அவர் எடையை தூக்க முயற்சித்தாலும் கட்டுப்பாட்டை மீறி கழுத்தில் பலமாக விழுந்தது.
அதிக எடை கொண்ட பார்பெல் கழுத்தில் விழுந்ததில் ஜெஸ்டினின் கழுத்து முறிந்ததுடன் கழுத்து நரம்புகள் சேதமடைந்தன. இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உடற்பயிற்சியில் அனுபவமும் திறமையும் வாய்ந்தவராக அறியப்பட்ட ஜெஸ்டின் கழுத்து முறிந்து உயிரிழந்த சம்பவம் ஃபிட்னஸ் பிரியர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.