இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை சேர்ந்தவர் 33 வயதான ஜோசுவா ஹுடகலுங். அங்கு உயிர் நீத்தவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வீட்டு கூரையின் மீது பலத்த சத்தத்துடன் ஒரு பொருள் வந்து விழுந்துள்ளது.
“எப்போதும் போல அன்று காலை என் வீட்டின் அருகே வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டின் மீது ஏதோ ஒன்று விழுந்தது. அதனால் வீடே அதிர்ந்தது. பெரிய மரம் தான் வீட்டின் மீது விழுந்து விட்டது என பதறி அடித்து கொண்டு ஓடினேன். வீட்டின் பிள்ளைகளும், மனைவியும் இருந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது அனல் பறக்க ஃபுட்பால் சைஸில் ஒரு கல் தரையில் புதைந்து இருந்தது. நானும் என் மனைவியும் மண்வெட்டி மூலம் அதை தோண்டி எடுத்து பார்த்த போது அது விண்கல் என தெரிய வந்தது” என்கிறார் அவர்.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான அந்த விண்கல்லை அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் விற்பனை செய்ததன் மூலம் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார் ஜோசுவா. இது அவரது முப்பது ஆண்டு கால வருமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பணத்தில் தனது தேவை போக மீதமுள்ளவற்றை தங்கள் கிராமத்தில் தேவாலயம் கட்ட பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.