இந்தோனேசியாவில், ‘கிழக்கு ஜாவா’ என்கிற தீவு உள்ளது. இது, அங்குள்ள பிரதான தீவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீவில்தான் லாமங்கன் என்ற நகரமும் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துவரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர், ஹிஜாப்பை சரியாக அணியாமல் பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் ஆசிரியர் ஒருவர் தண்டனை வழங்கியிருக்கிறார். அதன்படி 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு மொட்டை அடித்துள்ளார்.
இந்த விவகாரம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதையடுத்து பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. ஆனால், தவறு செய்த ஆசிரியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ஹார்டோ, "மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நேர்த்தியான தோற்றத்திற்காக முகத்திரை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிகழ்வுக்காக பெற்றோரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுள்ளோம். அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பள்ளி மாணவிகளுக்கு உளவியல்ரீதியாக ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இந்தோனேசியா ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சோனோ, “இந்த வழக்கு இந்தோனேசியாவில் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை தலையிட்டு அந்த ஆசிரியரை பணியிலிருந்து நீக்க வேண்டும். அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உளவியல் நிபுணர்களை நியமித்து ஆலோசனை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஹிஜாப் அணியாத சில மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.