உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று, பெட்ரோலியப் பொருட்கள். அந்தப் பெட்ரொலியத்தை நம்பித்தான் சீனா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் உள்ளன. அதன்படி, உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு கடந்த 3 மாதங்களாகத் தொடா்ந்து குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 19.10 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதத்தில் 14.60 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஈரானிடமிருந்து கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 8.91 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 8.66 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 4.84 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 8.20 லட்சம் பீப்பாய்கள் எனக் கூடுதலாக 3.34 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் 34 சதவீதமாக குறைந்துள்ளது, ஜூலையில் 42 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிற்கான ரஷ்ய விநியோகம் மாதந்தோறும் 23 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவிற்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய்க்கான விலை தள்ளுபடி குறைவு மற்றும் கட்டணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள், போதிய பருவமழையால் எண்ணெய் தேவை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவில் அரசு நடத்தும் சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சில இந்திய சுத்திகரிப்பு ஆலைகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதிலும், வளர்ந்துவரும் உள்நாட்டு எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் இந்தியா கவனம் செலுத்துவதால் ரஷ்யாவின் இறக்குமதி குறைவதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தியா சவூதி அரேபியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்திய இறக்குமதி ஒருநாளைக்கு 8,20,000 பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இது ஜூலையில் இருந்து 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 11 சதவீதமாக இருந்த இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் சவுதி அரேபியாவின் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.