பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, விரைவில் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற உள்ளது. இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை வட்டமடித்து வரும் ஊழல் விவகாரம் பிரேசில் அதிபருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கடந்த பிப்ரவரி மாதம் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் ஓர் ஒப்பந்தத்தை இறுதி செய்தன. அதன்படி, முதல்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 2 கோடி கோவாக்சின் டோஸ்களை இறக்குமதி செய்ய 324 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.23,000 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை 15 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் 1.34 டாலருக்கு ஒரு டோஸை அளிக்க முன்வந்தபோது, பிரேசில் அரசு கூடுதலாக 13.70 டாலர் கொடுத்து டோஸ் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, இந்த விவகாரம் பூதாகரமாக தொடங்கியது.
இதன்பின், இந்த ஊழல் புகாரால் 2 கோடி கோவாக்சின் டோஸ்களை பாரத் பயாடெக்கிடமிருந்து வாங்குவதாக பிரேசில் அரசு போட்டிருந்த ஒப்பந்தம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த தடுப்பூசி ஊழல் விவகாரம், அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த மோசடி குற்றச்சாட்டு, அடுத்த ஆண்டு போல்சனாரோவின் தோல்விக்கு வழிவகுக்கவும் செய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"பிரேசிலுக்கான எங்கள் தடுப்பூசி விநியோகத்தில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை. விலையை பொறுத்தவரை, இந்தியாவுக்கு மட்டுமே குறைந்த விலையை நிர்ணயித்துள்ளோம். பிற நாடுகளுக்கு, சந்தை விலை அடிப்படையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில், பிற நாடுகளில், 15-20 டாலர் வரை ஒரு டோஸ் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒப்பந்தத்திற்காக முன்கூட்டியே பணம் பெறவில்லை" என்று இந்த விவகாரத்தில் பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்தாலும், பிரேசிலிய ஊடகங்களில் கோவாக்சின் விவகாரம்தான் நிரம்பியுள்ளன.
போல்சனாரோவைப் பொறுத்தவரை, அவர் அதிபர் ஆனதே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் தாக்கத்தால்தான். அவருக்கு முன்பு ஆட்சி செய்து வந்த இடதுசாரி முன்னணியும், தில்மா ரூசெப் தலைமையிலான அரசு ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆட்சியை இழந்தன. மேலும், 2018 தேர்தல்களில் இந்த ஊழல்களை கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்த போல்சனாரோ, ``நான் அதிபரானால் ஊழல் பேச்சுகளுக்கு இடமிருக்காது" என ஒவ்வொரு இடங்களிலும் முழங்கினார். கூடவே பிரசாரத்தின்போது கத்தியால் ஒருவர் போல்சனாரோவை குத்தவிட, அதுவரை பிரேசிலிய அரசியலில் ஒரு சிறிய நபராக இருந்த போல்சனாரோ அனுதாப அலையால் அதிகார மையத்துக்கு வந்தார்.
இதனால், அதுவரை இடதுசாரி அரசாக இருந்த பிரேசில் தீவிர வலதுசாரியான போல்சனாரோ தலைமையில் வலதுசாரி அரசாக மாறியது. இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்றின் ஆரம்ப காலகட்டம் முதலே போல்சனாரோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஆரம்பம் முதலே கொரோனா குறித்த அம்சங்களை கேலி செய்து வந்தார். கொரோனா விதிமுறைகளை மீறும் அவரின் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர், கொரோனாவை 'சிறிய காய்ச்சல்' என்றும் 'பொருளாதார காரணங்களுக்காக இது விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது' என்றும் கேலி செய்தார்.
இதையடுத்தது அவரின் அலட்சியத்தால் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என்று கூறியது பிரேசிலின் காங்கிரஸின் செனட் குழு. மேலும் ஏராளமான இறப்புகளுக்கு போல்சனாரோ தலைமையிலான அந்நாட்டு அரசுதான் வழிவகுத்தது எனக் கூறி அதுபற்றி ஆய்வும் நடத்தி வருகிறது. தொற்றுநோயை சரியாக நிர்வகிக்காததால், இந்த விமர்சனங்கள் ஏற்பட்டது.
தடுப்பூசி தொடர்பான விமர்சனங்களால் போல்சனாரோ அரசு தடுமாறி கொண்டிருந்த தருணத்தில்தான் மார்ச் மாதத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அது, பிரேசில் அரசியலில் போல்சனாரோவுக்கு தற்போது முக்கிய எதிரியாக பார்க்கப்பட்டு வரும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா என்பவரின் தண்டனையை ரத்து செய்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் இந்த லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 2018 தேர்தலில் போட்டியிடுவதில் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டார். இதனால் போல்சனாரோ பெரிய அளவு போட்டியில்லாமல் அதிபராக முடிந்தது.
இப்படியான நிலையில்தான் இப்போது தடுப்பூசி ஊழல் விவகாரமும் சேர்ந்துகொண்டுள்ளது. முன்னதாக தடுப்பூசி ஒப்பந்தத்தின்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 மில்லியன் டோஸும், மே மாதத்தில் நான்கு மில்லியன் டோஸும் வரவிருந்தது எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தடுப்பூசியின் எந்த அளவும் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதன்முதலில் பிரேசிலிய காங்கிரஸ்காரர் மட்டும் அந்நாட்டு சுகாதாரத்துறையை சேர்ந்த லூயிஸ் ரிக்காடோ மிராண்டா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மிரண்டாவின் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இந்தக் குற்றச்சாட்டை பின்னாளில் தீவிரப்படுத்தினார். இப்படி அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் எழுப்ப, அதிபர் போல்சனாரோ எதுவும் தெரியாதது போல் அமைதி காத்து வந்தார். அவரின் இந்த செயலற்ற தன்மையே அவரை சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது. எனினும், நீண்ட நாட்கள் மற்றும் விவாதங்களுக்கு பிறகு, குற்றச்சாட்டுகளின் அலைகளைத் தணிக்கும் வகையில் போல்சனாரோவும் அவரது குழுவும் கோவாக்சின் தடுப்பூசிகள் நாட்டிற்கு வரவில்லை என்றும், இதற்காக பணம் ஏதும் கைமாறவில்லை என்றும் கூறினர். மறுப்பைத் தொடர்ந்து, பிரேசில் அரசாங்கம் கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதன்பின்னும் விவகாரம் முடியவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. விசாரணையில் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இடைத்தரக நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நிதிநிலை அறிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலிய அரசியலின் கடந்த கால அரசுகள் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே பறிபோயுள்ளன. அந்த வரலாறு மீண்டும் நிகழுமா என்பது அடுத்து வரும் காலங்களில் தெரியும். இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசிலை அடைந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த ஒரு பிரேசில் குடிமகனும் இந்த தடுப்பூசியை மறக்க முடியாத வகையில் இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
- கட்டுரை உறுதுணை: The Federal