இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது இளைஞர், எம்.பி.ஏ. படிப்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜார்ஜியா மாகாணம் லிதோனியா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துவந்த விவேக் சைனி, தனது படிப்புச் செலவுக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விவேக் சைனி பணிபுரிந்த சூப்பர் மார்க்கெட் பகுதிக்கு அருகே போதைக்கு அடிமையான ஜுலியன் பவுல்க்னே என்பவர் சுற்றி வந்துள்ளார். வீடு இல்லாமல் வீதியில் கிடந்ததால் விவேக் சைனி இரக்கப்பட்டு அவர் தங்கிக் கொள்ள சூப்பர் மார்க்கெட்டில் இடம் கேட்டு கொடுத்து அவர் சாப்பிடுவதற்கு உணவும் உடையும் கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளடைவில் ஜுலியன் பவுல்க்னேவின் செயல்பாடு அச்சுறுத்தும் விதமாக இருந்ததால் உடனே அங்கிருந்து கிளம்புமாறு விவேக் சைனி கூறியுள்ளார். மேலும் உடனே கிளம்பாவிட்டால், ’போலீசிடம் புகாரளிப்பேன்’ என எச்சரித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த பவுல்க்னே, தனக்கு உதவியவர்கூட என்று எண்ணாமல், விவேக் சைனி வீட்டுக்குச் செல்ல இருந்த நேரத்தில், தாம் வைத்திருந்த சுத்தியலால் முகத்திலும் தலையிலும் தாக்கியுள்ளார்.
இப்படி, 50க்கும் மேற்பட்ட முறை தாக்கியதில் விவேக் சைனி நிகழ்விடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றதாகவும், இந்த தாக்குதல் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதைப் பார்த்த சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளியான பவுல்க்னேவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்காவில் இந்திய மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.