இந்திய மருந்தியல் துறையால் உலகிற்கே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் செய்தியாளர்களை வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் சந்தித்தார். அவர் பேசும்போது, “இந்தியாவில் முக்கியமானவை பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய மருந்தியல் துறை கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகளை சிறப்பாக செய்து வருகின்றது. அவர்கள் மற்ற நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். இந்திய மருந்தியல் துறை தங்கள் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை வழங்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்து சோதனை முயற்சியில் உள்ளது. இது ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மருத்துவப் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே நோயின் பிடியில் தள்ளியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 9.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24,936 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 6.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.