இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஸ்ருன்யா கொடுரு என்ற மாணவி, மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில்நுட்பம் பயின்ற அவர், கல்லூரி படிப்பு முடிவடைந்த நிலையில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 4ஆம் தேதி ஜான் ஜாசிண்டோ நினைவுச் சின்னத்தை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார் அவர். அப்போது திடீரென தாக்கிய மின்னலால், சுஸ்ருன்யா அருகில் இருந்த குளத்தில் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மின்னல் தாக்கியதில் சுஸ்ருன்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதுடன், மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுஸ்ருன்யா சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு நீடித்த தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக அவரின் உறவின் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இதனால் சுஸ்ருன்யாவால் சுயமாக மூச்சுவிட முடியாத சூழல் உருவானதால், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஸ்ருன்யாவின் நண்பர்கள் இணைந்து தனியார் தொண்டு அமைப்பு மூலம் நிதி திரட்டி அவரது சிகிச்சைக்காகச் செலவழித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுஸ்ருன்யா சுயநினைவுக்கு திரும்ப எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார் என்றும் முழுமையாகத் தெரியவில்லை. மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்து கவனித்துக்கொள்ள பெற்றோர் விரும்பியுள்ளனர். எனினும் அவர்களிடம் போதிய பண வசதி இல்லாததால், அரசின் உதவியை நாடியுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் மின்னல் தாக்கி ஆண்டுக்கு 43 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கிறது என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மின்னல் தாக்கியவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 90 சதவீதம் பேர் பல்வேறு குறைபாடுகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.